சன்னபட்னா இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் நான்தான்: டி.கே. சிவக்குமார்
- குமாரசாமி எம்.பி.யாக வெற்றி பெற்றதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- டிகே சிவக்குமார் சகோதரர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் சன்னபட்னா சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன் என காங்கிரஸ் தலைவரும், கர்நாடக மாநில துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் போட்டியிட்டாலும் தனக்கு கவலை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வரான இவர் சன்னபட்னாவில் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார். அரசியல் உள்நோக்கத்துடன் இங்கு டிகே சிவக்குமார் சுதந்திர தினத்தை கொண்டாடியதாக கூறப்படுகிறது.
தற்போது டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.-வாக உள்ளார். மத்திய மந்திரியாக உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டிகே சிவக்குமாரின் சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான டிகே சுரேஷ் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். இவர் சன்னபட்னா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அண்ணனின் தோல்விக்குப் பழிவாங்கவும், அப்பகுதியில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டவும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் களம் இறங்கலாம் எனத் தெரிகிறது.
சன்னபட்னா தொகுதியில் வெற்றி பெற்றால், அதன்பின் தற்போது அவர் வெற்றி பெற்ற தொகுதியை அண்ணனுக்கு விட்டுக்கொடுக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.