கர்நாடக அரசு விளம்பரங்களுக்கு தடை.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை.. ஏன் தெரியுமா?
- தெலுங்கானா தினசரி நாளேடுகளில் கர்நாடக அரசு விளம்பரங்கள் வெளியீடு.
- பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி தெலுங்கானா தினசரி நாளேடுகளில் கர்நாடக அரசு செய்த சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை வெளியிட்டது.
கர்நாடக அரசு விளம்பரங்கள் தேர்தல் நடைபெற இருக்கும் தெலுங்கானா மாநில நாளேடுகளில் விளம்பரங்களாக வெளியிடுவது குறித்து பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கும் தேர்தல் ஆணையம், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் விளம்பரங்கள் தெலுங்கானா நாளேடுகளில் வெளியிட தடை விதித்து இருக்கிறது.
தேர்தலில் பலத்தை நிரூபிக்க காங்கிரஸ் கட்சி பொது மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறது என பா.ஜ.க. குற்றம்சாட்டி இருந்தது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கட்சி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யானின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதே நாளில் தெலுங்கானா மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் என மொத்தம் ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.