இந்தியா

'டுவிட்டர்' நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்த கர்நாடக ஐகோர்ட்டு

Published On 2023-07-01 02:12 GMT   |   Update On 2023-07-01 02:12 GMT
  • ‘டுவிட்டர்’ நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
  • ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

பெங்களூரு :

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், அரசின் உத்தரவுகளுக்கும் எதிராகவும் போலி பதிவுகள், வன்முறையை தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிடும் சமூக வலைத்தள கணக்குகளை முடக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சமூக வலைத்தளமான 'டுவிட்டர்' நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவில், சமூக விரோத செயல்களில் தொடர்புடையதாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு 2,851 கணக்குகளையும், 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதனை பின்பற்ற தவறினால், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

எனினும், மத்திய அரசின் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் 'டுவிட்டர்' நிறுவனம் இருந்து வந்தது. மேலும், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் 'டுவிட்டர்' நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது டுவிட்டர் நிறுவனம் சார்பில் வாதாடிய வக்கீல், 'சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுவது அவரவர் விருப்பம். அதை தடுக்க நினைப்பது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் ஆகும். அதையும் மீறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட வலைத்தள கணக்குகளை பதிவிடுபவர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்ட நீதிபதி, பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துகளை பதிவிடுவதை தடுப்பதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் 'டுவிட்டர்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசின் உத்தரவை கடைப்பிடிக்க தவறிய 'டுவிட்டர்' நிறுவனம் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் 'டுவிட்டர்' நிறுவனத்தின் மனுவைவும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Tags:    

Similar News