இந்தியா

பெயர்ப்பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி கட்டாயம்: கர்நாடக சட்டமேலவையில் நிறைவேறிய மசோதா

Published On 2024-02-20 14:22 GMT   |   Update On 2024-02-20 14:22 GMT
  • பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி இடம்பெற வலியுறுத்தி சிலநாட்களுக்கு முன் போராட்டம் நடந்தது.
  • பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 60 சதவீத கன்னடம் இடம்பெற வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டது.

பெங்களூரு:

கர்நாடகாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி கட்டாயம் என சட்ட மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

கர்நாடகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக அளவில் ஆங்கில பெயர்ப்பலகை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை கண்டித்தும், பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி எழுத்துக்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியும் சிலநாட்களுக்கு முன் போராட்டம் நடந்தது. அப்போது சில வன்முறை சம்பவங்கள் நடந்தது.

இதைத்தொடர்ந்து, பெங்களூர் மாநகராட்சி தலைநகரில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்திலும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 60 சதவீத கன்னடம் இடம்பெறச் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

கர்நாடக அமைச்சரவையிலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பபட்டது. இதை முதலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெற்று ஒப்புதலுடன் அனுப்புங்கள் எனக்கூறி ஜனவரி 30-ம் தேதி திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, தற்போது நடந்து வரும் கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மசோதா முதன்முதலாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது .

இந்நிலையில், இன்று சட்ட மேலவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆளுநரும் இதற்கு ஒப்புதல் தர உள்ளார்.

இதனால் கர்நாடகாவில் கடைகள், வணிக வளாகம் மற்றும் தொழில்நிறுவனங்கள் அனைத்திலும் 60 சதவீதம் கன்னட எழுத்துக்கள் கட்டாயம் என்ற சட்டம் விரைவில் அமல்படுத்தபட உள்ளது.

Tags:    

Similar News