இந்தியா

கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 60 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை

Published On 2024-03-27 10:20 GMT   |   Update On 2024-03-27 10:20 GMT
  • பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
  • கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா குழுவினர் இன்று காலை மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 100-க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைக்கு 13 சூப்பிரண்டுகள், 12 துணை சூப்பிரண்டுகள் தலைமை தாங்கி உள்ளனர்.

இதில் பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதுபோல் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பீன்யா போலீஸ் நிலையம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சேத்தன் என்பவர் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டார். அதற்கு போலீசார் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறு அவரிடம் கேட்டனர்.

இதையடுத்து பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உதவி கமிஷனர் ஜீப் டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோர் சேத்தனிடம் இருந்து முன்பணமாக ரூ.50,000 வாங்கினார்கள். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணா தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோலார் மாவட்டம் பங்கராபேட் தாலுகாவின் ஜே.குல்லஹள்ளி கிராம பஞ்சாயத்தில் பஞ்சாயத்து செயலாளர் கோவிந்தப்பா குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரிடம் பஞ்சாயத்தில் கணக்கு தொடங்க ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். முனியப்பா முதலில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்த அவர் மீதி பணம் ரூ.2 ஆயிரத்தை கோவிந்தப்பாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தபோது லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்ட பள்ளாப்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளர் வீரண்ணா விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது லோக் ஆயுக்தா வலையில் சிக்கினார். 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கும்போது அவர் பிடிபட்டார். அப்போது அங்கு இருந்த இடைத்தரகர் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு, உத்தர கன்னடா, பிதர், ராமநகரா, கார்வார், சன்னபட்னா உள்ளிட்ட 60 இடங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம், ஆவணங்கள், சட்ட விரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News