இந்தியா

யானைகளை விரட்டும் சிறப்பு தேனீக்களை வளர்க்க கேரள அரசு நடவடிக்கை: முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

Published On 2024-03-16 03:45 GMT   |   Update On 2024-03-16 03:45 GMT
  • வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
  • காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. அங்கு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

அவ்வாறு புகும் வன விலங்குகள் மனிதர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை கொன்றுவிடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகின்றன. வயநாடு மாவட்டம் வானந்தவாடி பகுதியில் கடந்த மாதம் அஜி என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு புகுந்த காட்டு யானை, அஜியை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் வயநாடு மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வயநாடு மாவட்டத்தில் குர்வா தீவு அருகே வனத்துறை வழிகாட்டி பால் என்பவரும் காட்டு யானை தாக்கி பலியானார். வயநாடு மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் காட்டு யானை தாக்கி 3 பேர் பலியாகி விட்டனர்.

இதற்கிடையே வயநாடு மாவட்டத்தில் சில இடங்களில் புலி மற்றும் சிறுத்தையும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதிக்கு உள்ளாகினர். வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மனித மற்றும் வனவிலங்கு மோதலை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க, யானைகள் புகும் பகுதிகளில் சிறப்பு தேனீக்களை வளர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:-

மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறை தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 36 வனப்பிரிவுகளில் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும்.

காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும். இந்த தேனீக்கள் கரடிகளை ஈர்ப்பதால், அவை கரடி இல்லாத பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

வனவிலங்குகள் தாக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை செய்ய ஊராட்சி அளவில் வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்படும். மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் 900 தற்காலிக கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதற்காக வயநாடு வனப்பகுதியில் 341 குளங்களும், இடுக்கியில் 249 குளங்களும் பராமரிக்கப்படுகின்றன. தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணியும் பரிசீலனையில் உள்ளது.

வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.13.70 கோடியில் ரூ.6.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.7.26 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.

இவ்வாறு முதல்- மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News