கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: என்ஐஏ அதிகாரிகள் ஆதாரங்களை அழித்து விட்டதாக ஸ்வப்னா சுரேஷ் புகார்
- கேரளா மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கே.டி.ஜலீல் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு.
- எந்த நிலைக்கும் இறங்க முடியும் என்று அவர் நினைக்கிறார்.
திருவனந்தபுரம்:
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான ஸ்வப்னா சுரேஷ், நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இதில் தொடர்பு இருப்பாக கூறியிருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜலீல் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோர் மீதும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று பேட்டி அளித்த ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளதாவது:
இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழித்து விட்டனர். கேரள முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கே.டி.ஜலீல் மீதான எந்த குற்றச்சாட்டுகளையும் அவரால் மறுக்க முடியாது. இது குறித்து ஆதாரத்துடன் எனது வாக்குமூலத்தில் சேர்த்துள்ளேன். அவர்தான் தற்போது இந்த ஆதாரங்களை அழிக்க நினைக்கிறார்.
எந்த நிலைக்கும் இறங்க முடியும் என்று அவர் நினைக்கிறார். எம்.எல்.ஏவாக அவர் எதையும் செய்ய முடியும், ஒரு நாளிதழையோ அல்லது பத்திரிகையையோ அல்லது என்னைப் போன்ற ஒரு பெண்ணையோ தாக்க முடியும்.
சிலவற்றை என்னால் வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் இது வழக்கின் ஒரு பகுதி, அது விசாரணையில் உள்ளது. எனவே உண்மையை கூற முடியாமல் திணறுகிறேன். என்னுடைய ஆதாரங்களை அவர்கள் அழித்தாலும் அவற்றை மீண்டும் சேகரிக்க நான் முயன்று வருகிறேன். இந்த வழக்கில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.