இந்தியா

பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சபரிமலைக்கு செல்லக்கூடாது: கேரள ஐகோர்ட் அதிரடி

Published On 2023-10-19 05:14 GMT   |   Update On 2023-10-19 07:05 GMT
  • லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் வேன், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருவார்கள்.
  • தடையை மீறி ஏராளமானோர் தங்களது வாகனங்களை அலங்காரம் செய்துகொண்டு வருவதாக கேரள ஐகோர்ட்டில் புகார் கூறப்பட்டது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கிறது.

இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் வேன், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருவார்கள்.

பஸ்கள் மற்றும் வேன்களில் வரக்கூடிய பக்தர்களில் பலர், தங்களது வாகனங்களை அலங்கார விளக்குகள், தோரணங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்திருப்பார்கள். அதுபோன்று வரக்கூடிய வாகனங்களால் விபத்து ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

ஆகவே சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்ய கேரள ஐகோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இருந்த போதிலும் தடையை மீறி ஏராளமானோர் தங்களது வாகனங்களை அலங்காரம் செய்துகொண்டு வருவதாக கேரள ஐகோர்ட்டில் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்து வரக்கூடாது என்றும், அதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேரள ஐகோர்ட் மீண்டும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Tags:    

Similar News