சபரிமலையில் கூட்ட நெரிசலை நிர்வகிக்க நிலக்கல் பகுதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்: கேரள ஐகோர்ட்
- பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
- சபரிமலையில் உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மண்டல பூஜை காலத்தில் இருந்ததுபோன்றே, தற்போதும் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், சன்னிதானம், பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதனால் வயது முதிர்ந்த பக்தர்கள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மகரவிளக்கு பூஜை தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலையில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு யோசனைகளை தெரிவித்திருக்கும் கேரள மாநில ஐகோர்ட், தற்போது மேலும் ஒரு அறிவுரையை கூறியிருக்கிறது.
சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக செயல்பட்டு வரும் நிலக்கல் பகுதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரீஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.
நிலக்கல் வாகன நிறுத்தம் தொடர்பாக தேவசம்போர்டு மற்றும் பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்டுகளிடம் இருந்து பிரமாண பத்திரங்களை நீதிமன்றம் கேட்டிருந்தது. அதனை அவர்கள் தாக்கல் செய்ததன் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது.