இஸ்ரேலில் நடந்த ராக்கெட் தாக்குதலில் கேரள நர்சு படுகாயம்: வீடியோ காலில் பேசிய குடும்பத்தினர் கண்ணீர்
- டெல்அவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- ஷீஜாவுடன் அவரது தாய் சரோஜினி, சகோதரி ஷஜி ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடியே பேசினர்.
திருவனந்தபுரம்:
இஸ்ரேலில் நடந்துவரும் போர், அங்கு மட்டுமின்றி அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து பதிலுக்கு பதிலாக எதிர் தாக்குதல் நடத்தியபடியே இருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இஸ்ரேலில் நடந்துவரும் இந்த போரில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள் யாரும் பலியாகியதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சு ஒருவர், ராக்கெட் தாக்குதலில் படுகாயமடைந்த தகவல் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூர் ஸ்ரீகண்டாபுரத்தை சேர்ந்த வர் ஆனந்த். இவரது மனைவி ஷீஜா, இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோன் என்ற பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த இடம் காசா பகுதியின் எல்லையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்நிலையில் ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷீஜா படுகாயமடைந்தார். அவர் முதலில் பார்சிலாய் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் ட்டார்.
பின்பு டெல்அவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கணவருடன் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது தான், ராக்கெட் தாக்குதலில் ஷீஜா சிக்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இஸ்ரேலில் போர் நடப்பதையறிந்த ஷீஜாவின் கணவர் ஆனந்த், அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேசி பத்திரமாக இருக்கிறாயா? என்று கேட்டிருக்கிறார். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது தான், ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடந்திருக்கிறது.
அதில் ஷீஜா சிக்கிக் கொண்டதால், அவரது செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பதறிப்போன் ஆனந்த், தனது மனைவியை மீண்டும் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அவரது செல்போனைதொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தனது மனைவிக்கு என்ன ஆனது? என்பது தெரியாமல் ஆனந்த் மற்றும் ஷீஜாவின் குடும்பத்தினர் தவித்தபடி இருந்தனர். இந்நிலையில் ராக்கெட் தாக்குதலில் ஷீஜா காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கும் தகவலை, அவரது குடும்பத்தினருக்கு இஸ்ரேலில் இருக்கும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷீஜாவின் குடும்பத்தினர் கதறினர். ஷீஜாவின் நிலை நன்றாக இருப்பதாக குடும்பத்தினரிடம் நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷீஜாவுடன் வீடியோ காலில் பேச வைத்தனர்.
ஷீஜாவுடன் அவரது தாய் சரோஜினி, சகோதரி ஷஜி ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடியே பேசினர். தனது மகளின் நிலையை கண்டு அவர்கள் வேதனையடைந்தனர்.