பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி முகநூலில் கருத்துபதிவிட்டவர் மீது வழக்கு
- முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.
- இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது
திருவனந்தபுரம்:
பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுவதாக கேரள போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.
அதில், கேரளாவை சேர்ந்த நபீல் நாசர் என்பவர் தான் இது போன்ற கருத்துக்களை பதிவிடுவதாகவும், கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் ஆட்சேபணைக்கு ரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டு வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக போலியான அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஐ.பி.சி.153, 171ஜி மற்றம் கேரள போலீஸ் சட்டத்தின் 120 (ஒ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.