இந்தியா

ஏ-ஐ தொழில்நுட்பங்களுடன் `ஸ்மார்ட்' ஆக மாறும் கேரள போலீஸ் நிலையங்கள்

Published On 2024-07-01 05:26 GMT   |   Update On 2024-07-01 05:26 GMT
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 போலீஸ் நிலையங்கள்.
  • புகார்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

திருவனந்தபுரம்:

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளையும் நவீன மயமாக்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய காவல் துறையை நவீனப்படுத்த அனைத்து மாநிலங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அதன்படி கேரள மாநிலத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களும் `ஸ்மார்ட்' போலீஸ் நிலையங்களாக மாற்றப்பட உள்ளன. நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 போலீஸ் நிலையங்களை முன்னிலைப்படுத்தி இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு நவீனமாக்கும் போலீஸ் நிலையங்களில் புகார்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். அதற்காக அந்த போலீஸ் நிலையங்கள் அனைத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களால் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும் அங்கு நவீன தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற போலீசார் நியமிக்கப்படுகிறார்கள்.

இங்கு பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்களை சமாளித்தல், செயற்கை நுண்ணறிவு (ஏ-ஐ தொழில்நுட்பம்) உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு நெறிமுறைகள், முகத்தை அடையாளம் காணுதல் மற்றும் வீடியோ காட்சிகளை பகுப்பாய்வு செய்தல் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Tags:    

Similar News