சுரங்க மாபியாவுடன் தொடர்பு- போலீஸ் அதிகாரிகள் 7 பேர் பணி நீக்கம்
- ரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
- போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் போலீஸ் சரகத்தில் பணிபுரிந்த சிலர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.
அவர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்த போலீசார் பற்றி ரகசிய விசாரணை நடத்தினார். அதில் கோழிக்கோடு ரூரல் பகுதி ஜாய் தாமஸ், கண்ணூர் ரூரல் கோகுலன், கண்ணூர் நகரம் நிசார், கோழிக்கோடு ஷிபின், கண்ணூர் கிராமம் ஷெஜிர், காசர்கோடு ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
அவர்களில் ஜாய் தாமஸ், கோகுலன் ஆகிய இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆவார். மற்ற 5 பேரும் சிவில் போலீஸ் அதிகாரிகள் ஆவார். அவர்கள் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 7 பேரையும் டிஸ்மிஸ் செய்து கண்ணூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. புட்டா விமலாதித்யா உத்தரவிட்டார். கடமை தவறியது, ஒழுக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கேரள மாநில காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.