இந்தியா

தபால் அலுவலகம் சூறையாடிய வழக்கு: பினராயி விஜயனின் மருமகன் மந்திரி முகமது ரியாசுக்கு அபராதம்

Published On 2023-06-24 04:12 GMT   |   Update On 2023-06-24 04:40 GMT
  • முகமது ரியாஸ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருப்பவர் முகமது ரியாஸ். இவர் முதல்-மந்திரி பினராயி விஜயனின் மருமகன் ஆவார்.

முகமது ரியாஸ், கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோழிக்கோடு மாவட்ட செயலாளராக இருந்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது, வடகரையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் சூறையாடப்பட்டது.

இதுதொடர்பாக முகமது ரியாஸ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வடகரை தபால் அதிகாரி சார்பில் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மாவட்ட கோர்ட்டு, அபராத தொகையை கட்ட உத்தரவிட்டது.

இருப்பினும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அபராதத்தை கட்டாமல் இருந்து வந்தனர். இதுதொடர்பாக வடகரை தபால் துறை சார்பில், வடகரை கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, வட்டி மற்றும் கோர்ட்டு செலவுத் தொகை சேர்த்து ரூ.3.81 லட்சம் கட்ட உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மந்திரி முகமது ரியாஸ் உள்பட 12 பேரும், நீதிபதி ஜோஜி தாமஸ் முன்னி லையில் அபராத தொகையை கட்டினர்.

Tags:    

Similar News