இந்தியா

கர்நாடகாவை உலுக்கிய பெண் கொலையில் கொலையாளி அடையாளம் தெரிந்தது

Published On 2024-09-24 05:03 GMT   |   Update On 2024-09-24 05:03 GMT
  • குளிர்சாதன பெட்டி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (24) என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் ததேதியில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் நெலமங்களா பகுதியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது மகாலட்சுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு பின்னர் அவரது உடல் பாகங்களை 50 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டது தெரியவந்தது.

இதையடுத்து பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குறிப்பிட்ட சிலர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்,

மேலும் மகாலட்சுமியை தினமும் அவருடன் மாலில் ஆண்கள் அழகு நிலையத்தில் வேலைப்பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அழைத்து சென்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த வாலிபர் யார்? என்று விசாரணை தொடங்கினர். அப்போது அவரது செல்போன் எண் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் போலீசார் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போன் எண்ணை கைப்பற்றினர். மேலும் 4 சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

அப்போது அடிக்கடி மகாலட்சுமியின் செல்போன் எண்ணில் இருந்து தலைமறைவான மேற்கு வங்க வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது. எனவே காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது குறித்து கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறும் போது, பெண் கொலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதேபோல் போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது:-

கொலை குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார். மகாலட்சுமியை கொலை செய்த பிறகு இறைச்சி வெட்டுவது போல் வெட்டி உள்ளார். பின்னர் அவரது உடல் உறுப்புகளை ஒரு சூட்கேசில் ஏற்றிச் செல்ல கொலையாளி முயற்சி செய்து உள்ளார்.

ஆனால் இது முடியாததால் குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். மகாலட்சுமி உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன பெட்டி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலையாளியை தேடி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று கூறினார்.

Tags:    

Similar News