இந்தியா

கொல்கத்தா விவகாரம்: ராஜினாமா செய்யவும் தயார்- மம்தா பானர்ஜி அறிவிப்பு

Published On 2024-09-12 14:43 GMT   |   Update On 2024-09-12 16:00 GMT
  • முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.
  • போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பணிக்கு திரும்பவில்லை. டாக்டர்களின் போராட்டம் 34-வது நாளாக தொடரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சுகாதார நலன் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டாக்டர்களை சமாதானம் செய்து பணிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், 15 பிரதிநிதிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.

முதல்வர் மம்தா பானர்ஜியை, மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் மன்ற நிர்வாகிகள் பேருந்து மூலம் தலைமைச் செயலகத்திற்கு விரைந்தனர். ஆனால், மருத்துவர்களின் நேரலை கோரிக்கையை ஏற்க மம்தா அரசு மறுத்ததால், இருதரப்பு சந்திப்பு நடைபெறாமல் போனது.

இதைதொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்" என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேலும், " பதவி குறித்து கவலைப்படவில்லை, எனக்கு நீதிதான் முக்கியம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News