இந்தியா

என்.ஐ.டி. விடுதியில் 7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

Published On 2024-05-07 09:00 GMT   |   Update On 2024-05-07 09:00 GMT
  • யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய தொழில் நுட்ப கல்வி மையம் (என்.ஐ.டி) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யோகீஸ்வர்நாத் என்பவர் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

அவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் மாணவர் யோகீஸ்வர்நாத் விடுதியின் சி-பிளாக்கின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவர் யோகீஸ்வர்நாத் மாடியில் இருந்து குதித்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை. பாடங்கள் தொடர்பாக மன அழுத்தம் ஏறபட்டதன் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய தொழில் நுட்ப கல்வி மையத்தின் விடுதியில் 7-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News