இந்தியா

காங்கிரசின் இலவச திட்டங்கள் மக்களை ஏமாற்றும் வேலை: குமாரசாமி

Published On 2023-06-04 03:36 GMT   |   Update On 2023-06-04 03:36 GMT
  • கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்தார்.
  • காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை அறிவித்திருந்தனர்.

பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை அறிவித்திருந்தனர். அனைவருக்கும் இலவசம் என வாக்குறுதி அளித்தார்கள். தற்போது அந்த இலவச திட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். காங்கிரசின் இந்த இலவச திட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் ஏமாற்று வேலை பற்றி அறிந்து கொள்ள மக்களுக்கு நீண்ட நாட்கள் தேவைப்படாது.

காங்கிரசின் 5 இலவச திட்டங்கள் பற்றி பேசவோ, விமர்சனம் செய்யவோ எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளுக்கும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு இலவசங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் வேதனை அளிக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்தார். அவரது தலைமையில் தான் ஆட்சி நடைபெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் அரசு பணி இடங்கள் 2¾ லட்சத்திற்கும் மேல் காலியாக இருந்தது. அப்போது காலியாக இருந்த அரசு பணி இடங்களை நிரப்பவோ, வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கவோ சித்தராமையா முன்வரவில்லை.

சித்தராமையா ஆட்சியில் பட்டதாரிகளுக்கு வேலை வழங்காமல், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். பட்டதாரிகளிடம் இருந்து வாக்குகளை பெற்றுவிட்டு, அரசு துறைகளில் உள்ள 2¾ லட்சம் காலி பணி இடங்களை நிரப்பாமல் தற்போது ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார்கள். அதற்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். 24 மாதம் மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இலவச திட்டங்களுக்காக விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News