வயநாட்டில் விவசாயியை கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு
- புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.
- புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்த விவசாயி பிரஜீஷ் (வயது36) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல் அறுக்க வனத்துறையொட்டி உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்து கொன்று சாப்பிட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது மட்டுமின்றி, பீதியையும் ஏற்படுத்தியது. விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டு கொல்ல அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த புலியை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் களம் இறங்கினர்.
புலி நடமாட்டத்தை கண்டறிய வனப்பகுதியில் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டன. மேலும் புலியை சிக்க வைக்க கூண்டுகளும் அமைக்கப்பட்டன. புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இருந்த போதிலும் இதுவரை அந்த புலி சிக்கவில்லை. வனத்துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயியை பிரஜீசை கொன்ற புலி 13 வயதுடைய ஆண் புலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த புலியைப்பற்றிய தகவல்களின் அடிப்படையில் அதனை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.
விவசாயியை கொன்ற ஆள்கொல்லி புலியை கண்டுபிடிக்கும் பணிக்காக திணைக்களம் முத்தங்கா பகுதியில் இருந்து விக்ரம் மற்றும் பரத் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை கொண்டு புலியை தேடும் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.