3 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மாயம்: உத்தரகாண்டில் கடும் மழையினால் நிலச்சரிவு
- கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது.
- மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
வட இந்திய மாநிலமான உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டம். ருத்ரபிரயாக்கிலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவில், கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு யாத்திரையாக பக்தர்கள் மேற்கொள்ளும் கேதார்நாத் யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது.
சாலை வழியாக இந்த கோயிலுக்கு செல்ல முடியாததால், ருத்ரபிரயாக்கில் உள்ள கவுரிகண்ட் பகுதியிலிருந்து 22 கிலோமீட்டர் மலை வழியில் ஏறி செல்ல வேண்டும். கவுரிகண்ட் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 3 கடைகள் சேதமடைந்துள்ளன. மேலும், பத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை குழு, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
தற்போது வரை இடிபாடுகளில் 3 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன.
"காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது" என்று ருத்ரபிரயாக் பகுதி காவல் கண்காணிப்பாளர், டாக்டர் விசாகா கூறியுள்ளார்.
மழையினாலும், ஆங்காங்கே சரிந்து விழும் பாறைகளினாலும் மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.