இந்தியா (National)

'பசுவதை செய்வதாலேயே கேரளாவில் நிலச்சரிவு.. இன்னும் நிறைய நடக்கும்' - பா.ஜ.க. தலைவர் சர்ச்சை பேச்சு

Published On 2024-08-04 16:21 GMT   |   Update On 2024-08-04 16:24 GMT
  • 'வயநாடு நிலச்சரிவானது பசு வதையோடு நேரடியாக தொடர்புடையது'
  • கேரளாவில் பசு வதையை நிறுத்தவில்லை என்றால் மேலும் இதுபோன்று தொடர்ந்து பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்ஏ.வும் பாஜக மூத்த தலைவருமான கியான் தேவ் அகுஜா, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அங்கு பசுவதை செய்யப்படுவதே காரணம் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

 

இதுகுறித்து ஊடகத்தினரிடம் அவர் பேசுகையில், 2018 முதல் நடந்த பேரிடர்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், பசு வதை செய்யப்பட்ட பகுதிகளில்தான் அதிக பேரழிவு சமபவங்கள் ஏற்பட்டுள்ளது தெரியும். வயநாடு நிலச்சரிவானது பசு வதையோடு நேரடியாக தொடர்புடையது.

கேரளாவில் பசு வதை அதிகம் நடப்பதாலேயே இந்த பேரழிவானது ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் கேரளாவில் பசு வதையை நிறுத்தவில்லை என்றால் மேலும் இதுபோன்று தொடர்ந்து பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

தற்போது உத்தராகண்ட், இமாச்சல பிரதேசத்திலும் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் வயநாட்டுடன் ஒப்பிடும்போது அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறைவானதே ஆகும் என்று தெரிவித்துள்ளார். அகுஜாவின் கருத்து சர்ச்சையானதை அடுத்து, இது சோககரமாக பேரழிவுக்கு மதச் சாயம் பூசுவதாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News