அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து பா.ஜ.க.-வில் இணைந்த தலைவர்கள்
- தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கொள்கை, சித்தாந்தங்களை மறந்து பா.ஜ.க.-வில் இணைகின்றனர்
- டிக்கெட் கிடைக்காத அதிருப்தி காரணமாகவும் பாஜகவில் ஏராளமான தலைவர்கள் இணைகின்றனர்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தபாஸ் ராய். பல்வேறு மோசடிகள் சம்பவம் தொடர்பாக கடந்த ஜனவரி 12 -ல் இவரது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது.
அப்போது திரிணாமுல் கட்சி சார்பில் அவருக்கு ஆதரவாக யாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை தபாஸ் ராய் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
ஆளும் திரிணாமுல் காங்கிரசின் தவறான ஆட்சி மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து போராடப்போவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் நேற்று அவர் பா.ஜ.க.-வில் சேர்ந்தார். கடினமான சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரசை (டிஎம்சி) விட்டு வெளியேறியதாக அவர் கூறினார்.
இது குறித்து திரிணாமுல் கட்சி தலைவர் சாந்தனு சென் கூறியதாவது:-
தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கொள்கை, சித்தாந்தங்களை மறந்து தபாஸ் ராய் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளார். பதவி ஆசைக்காக கட்சியை விட்டு விலகிய தபாஸ் ராய் போன்ற துரோகிகளை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
அவருக்கு அனைத்து வித பதவிகளையும் திரிணாமுல் கட்சி கொடுத்தது. ஆனால் அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார். அவருக்கு கொள்கை, சித்தாந்தம் கிடையாது. அமலாக்கத் துறை (ED)சோதனைக்கு பயந்துதான் பா.ஜ.க.-விடம் சரணடைந்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான அசோக் சவான் சமீபத்தில் பா.ஜ.க.-வில் இணைந்தார்.குஜராத் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அர்ஜுன் மோத்வாடியா நேற்று முன்தினம் பா.ஜ.க.-வில் இணைந்தார்.
கடந்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளனர்.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ.-க்கு பயந்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காத அதிருப்தி காரணமாகவும் பாஜகவில் ஏராளமான தலைவர்கள் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.