இந்தியா

17 கட்சிகள் பங்கேற்பு.. முக்கிய பிரதிநிதிகளுடன் நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

Published On 2023-12-06 15:29 GMT   |   Update On 2023-12-06 15:29 GMT
  • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் ஆலோசனை கூட்டம்.
  • ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்கொள்ளும் நோக்கில் எதிர் கட்சிகள் சார்பில் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மற்றொரு ஆலோசனை கூட்டம் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி, கே.சி. வேனுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, ஜெ.எம்.எம். கட்சியின் மஹூவா மஜி, ம.தி.மு.க. சார்பில் வைகோ, ஆர்.எஸ்.பி. கட்சியின் என்.கே. பிரேமசந்திரன், சி.பி.ஐ. சார்பில் பினோய் விஸ்வம், ஜெ.டி.யு. சார்பில் லாலன் சிங், எஸ்.பி. கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ் மற்றும் எஸ்.டி. ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இத்துடன் ஆர்.எல்.டி. சார்பில் ஜெயந்த் சவுத்ரி, என்.சி.பி. கட்சியின் வந்தனா சாவன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராகவ் சத்தா, தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் சவுரவ் கோகோய், நசீர் ஹூசைன் மற்றும் ராஜானி பாட்டீல், சி.பி.ஐ.எம். சார்பில் எலமரம் கரீம், ஆர்.ஜே.டி. சார்பில் ஃபயாஸ் அகமது, கேரளா காங்கிரஸ் சார்பில் ஜோஸ் கே மணி, என்.சி. சார்பில் ஹஸ்னைன் மசூதி, ஐ.யு.எம்.எல். சார்பில் முகமது பஷீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐந்து மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News