இந்தியா

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை

Published On 2024-06-01 01:29 GMT   |   Update On 2024-06-01 01:29 GMT
  • கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.
  • கடைசிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

ஆலந்தூர்:

'இந்தியா' கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து டெல்லியில் அந்த கூட்டணியின் கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) கடைசிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையில் 'இந்தியா' கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெறும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவரிடம், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அவர் இந்தியாவின் பிரதமர். என்ன வேண்டுமென்றாலும் செய்வார்' என்று கூறிவிட்டு சென்றார்.

Tags:    

Similar News