இந்தியா

ரெயில்களில் குறைந்த அளவில் முன்பதிவில்லா பெட்டிகள்: பயணிகள் வேதனை

Published On 2024-08-19 05:22 GMT   |   Update On 2024-08-19 05:22 GMT
  • பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை குறைத்து விட்டதாக பயணிகள் குற்றச்சாட்டு.
  • பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

திருப்பதி:

வட மாநில தொழிலாளர்களையும் ஏழைகளையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றிச் செல்லும் முக்கிய போக்குவரத்து சாதனமாக ரெயில்வே துறை இயங்கி வருகிறது.

வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பயணம் செய்யும் ரெயில்களில் முன்பை விட தற்போது பொதுபெட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு வரும் வட மாநிலத்தினர் நரக வேதனை அனுபவித்து வருவதாக கூறியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பொதுப்பட்டிகள் குறைவாக இருந்தன.

பொது பெட்டியில் பயணிகள் நுழைய முடியாத அளவுக்கு வட மாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் அதிக அளவில் இருந்தனர். ஏறும்போதே அவர்களுக்கு கடும் நெரிசல் சண்டை ஏற்பட்டது.

மிகுந்த சிரமத்துடன் உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால் இருக்கையில் அமர்ந்தவர்களால் எழுந்து கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏராளமானோர் தரையிலேயே படுத்து தூங்கினர்.

இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் காலடிகளுக்கு அடியில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்த படியும் பயணத்தை கழித்தனர். பலர் கால் வைக்கக்கூட இடம் இல்லாத இடத்தில் கால்கடுக்க நின்றனர். கழிவறையிலும் பயணிகள் இருந்தனர். அவர்கள் கழிவறையில் நின்று கொண்டு சாப்பிட்டதை காண முடிந்தது.

பொதுப்பட்டியில் இருந்த பெண்கள், ஆண்கள் என யாருமே கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி பயணம் செய்தனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகளும் அவதி அடைந்தனர்.

தெற்கு மத்திய ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்களில் 27 சதவீதம் பேர் ஏ.சி. மற்றும் படுக்கை முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்கின்றனர்.

பொது பெட்டிகளில் 73 சதவீத பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 அல்லது 6 பொதுப்பட்டிகள் இருந்தன. வருவாயை கருத்தில் கொண்டு பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை கணிசமாக குறைத்து விட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்

பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களை பற்றி ரெயில்வே நிர்வாகம் கவலைப்படவில்லை.

அவர்களை ஒரு பூச்சிகள் போல நடத்துகின்றனர். பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பல மணி நேரம் நரக வேதனையை அனுபவித்தபடி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கையில் குழந்தைகளுடன் இருந்த கர்ப்பிணி ஒருவர் நெரிசலில் சிக்கி காயம் அடைந்து இறந்தார்.

தெற்கு மத்திய ரெயில்வேயில் உள்ள பெட்டிகளில் பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என இதுவரை 30 லட்சம் கடிதங்கள் எழுதியுள்ளோம்.

இதே நிலை தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில ரெயில்களிலும் நீடித்து வருகிறது. நீண்ட தூர ரெயில்களில் பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News