இந்தியா
null

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த மல்யுத்த வீரர்- வீராங்கனைகள்

Published On 2023-06-05 05:21 GMT   |   Update On 2023-06-05 09:24 GMT
  • பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு
  • வீரர்- வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் இருக்கிறார். பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படாததால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கொதித்தனர்.

கடந்த 28-ந் தேதி புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அத்து மீறியதாக கூறி போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன.

இதனால் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். விவசாயிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். பல்வேறு தரப்பில் இருந்து மல்யுத்த நட்சத்திரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், வீராங்கனைகள் ஷாக்ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் நேற்று இரவு 11 மணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்த சந்திப்புக்கு பிறகு பஜ்ரங் புனியா, நிருபர்களிடம் கூறியதாவது:-

"பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரினோம். அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அமித்ஷா எங்களிடம் உறுதியளித்தார். சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் எங்களிடம் தெரிவித்தார்" என்றார்.

Tags:    

Similar News