இந்தியா

இந்தியா முழுவதும் வெற்றிபெறும் 6 சுயேட்சை வேட்பாளர்கள்

Published On 2024-06-04 12:38 GMT   |   Update On 2024-06-04 12:38 GMT
  • உமர் அப்துல்லாவை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற உள்ளார்.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் போட்டி சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற உள்ளார்.

இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 542 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக களம் இறங்கினர். இதில் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே வெற்றியை ருசிக்க இருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் ஃபரித்காட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியவர் சரப்ஜீத் சிங் கல்சா. இவர் இந்திரா காந்தியை படுகொலை செய்த பியாந்த் சிங்கின் மகன் ஆவார். இவர் ஆம் ஆத்மி வேட்பாளர் கரம்ஜித் சிங் அன்மோலை எதிர்த்து வெற்றி பெற இருக்கிறார். இவர் ஏற்கனவே 2014 மற்றும் 2019-ல் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதே மாநிலத்தில் உள்ள கதூர் சாஹிப் தொகுதியில் அம்ரித்பால் சிங் காங்கிரஸ் வேட்பாளரை சிங் ஜிராவை எதிர்த்து வெற்றிபெற இருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி தொகுதியில் விஷால் பிரகாஷ்பாபு பாட்டில் வெற்றி பெற உள்ளார். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சிவசேனாவுக்கு இந்த தொகுதி கொடுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிட்டார். இவர் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் வசந்த்தாதா பாட்டில் மகன் ஆவார்.

காஷ்மீர் லடாக் தொகுதியில் தேசிய மாநாடு கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்ட முகமது ஹனீபா ஜான் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

டாமன்&டையூ தொகுதியில் பட்டேல் உமேஷ் பாய் பாபுபாய் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவை எதிர்த்து அப்துல் ரஷித் ஷெய்க் வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.

2019-ல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

1951-52-ல் முதன்முறையாக நடைபெற்ற தேர்தலில் 37 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1957-ல் 42 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1962-ல் 20 பேரும், 1984-ல் 13 பேரும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

Tags:    

Similar News