நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய அகிலேஷ் யாதவுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு, ஒரே கோரிக்கை.
- வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது.
வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு, ஒரே கோரிக்கை" என்று உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த எக்ஸ் பதிவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், "தமிழ்நாட்டின் சமூகநீதி குரலை உரக்க எதிரொலித்ததற்கு நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.