எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் பா.ஜனதாவை அகற்றுவோம்: மம்தா பானர்ஜி
- மேகாலயாவில், இம்மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
- மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் இல்லை.
ஷில்லாங் :
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இம்மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் போட்டியிடுகிறது.
இந்தநிலையில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மேகாலயாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் இல்லை. மருத்துவ கல்லூரி இல்லை. நல்ல ஆஸ்பத்திரி இல்லை. ஆனால் ஊழல் மட்டும் இருக்கிறது.
மேகாலயாவில் நடக்கும் கான்ராட் சங்மா அரசு, எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை. ஊழலில்தான் ஈடுபடுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் இந்த அரசை மாற்றி, மேகாலயாவை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.
மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். டெல்லியில் இருந்து பா.ஜனதா ஆட்சியை அகற்றுகிறோம்.
வெளியில் இருந்து வரும் யாரும் உங்கள் மீது குடியுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.