பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்த பேருந்து- இருவர் படுகாயம்
- பெட்ரோல் பம்ப் ஊழியர்கள், பம்ப் அருகே வைக்கப்பட்டுள்ள தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
- சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பெட்ரோல் பம்பில் நேற்று பேருந்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பேருந்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பெரிய நெருப்பு பந்து ஒன்று திடீரென தாக்கி தீப்பிடித்துள்ளது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
இதைக்கண்டு பீதியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் ஓடினர். தீப்பிடித்த சில நொடிகளில், பெட்ரோல் பம்ப் ஊழியர்கள், பம்ப் அருகே வைக்கப்பட்டுள்ள தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைத்து, தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
தீ அணைக்கப்பட்டதை அடுத்து பேருந்து அங்கிருந்து இயக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பம்பில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.