ஆட்டோ ரைடுக்கு ரூ. 7.66 கோடி.. நிலாவுக்கா போனேன்? அதிர்ச்சியடைந்த பயணி
- சம்பவம் தொடர்பாக வீடியோவை பதிவு செய்துள்ளார்.
- ஜி.எஸ்.டி. வரி எதுவும் சேர்க்கப்படாமல் இருந்துள்ளது.
நொய்டாவை சேர்ந்த தீபர் என்ற பயணி ஒருவர் உபெர் ஆட்டோ மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளி கிழமை மிக சிறிய தூரம் பயணிக்க உபெர் ஆட்டோ முன்பதிவு செய்து, பயணத்துள்ளார். பயணத்திற்கு முன்பு தோராயமாக ரூ. 60 முதல் அதிகபட்சம் ரூ. 75 வரை ஆட்டோ கட்டணமாக செலுத்துவோம் என்று தீபக் எதிர்பாத்திருந்தார்.
எனினும், ரைடை நிறைவு செய்த தீபக் தனக்கு வந்த கட்டணத்தை பார்த்து அதிர்ந்தார். பயணத்திற்கு பின் அவர் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 7 கோடியே 66 லட்சம் என்று உபெர் செயலியில் காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த தீபக் அதிர்ச்சி அடைந்ததோடு, சம்பவம் தொடர்பாக வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.
வீடியோவின் படி தீபக் மேற்கொண்ட பயணத்திற்கான கட்டணம் ரூ. 1 கோடியே 67 லட்சத்து 74 ஆயிரத்து 647 என்றும் காத்திருப்பு கட்டணம் ரூ. 5 கோடியே 99 லட்சத்து 09 ஆயிரத்து 189 என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுதவிர விளம்பர கட்டணமாக ரூ. 75 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர் காத்திருக்கவில்லை எனினும், அதற்கான கட்டணம் சேர்க்கப்பட்டு இருப்பதாக தீபக் கூறுகிறார்.
அதிசயிக்கும் வகையில் இந்த கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரி எதுவும் சேர்க்கப்படாமல் இருந்துள்ளது. இதுவரை தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை எண்ணியதே இல்லை என்று தீபக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ வைரல் ஆன நிலையில், உபெர் இந்தியா சார்பில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.