இந்தியா

எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் உயர்வு- மத்திய மந்திரி பெருமிதம்

Published On 2023-03-17 03:03 GMT   |   Update On 2023-03-17 07:14 GMT
  • 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தது.
  • 2014-ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த முதுநிலை படிப்புகள், 65 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது.

புதுடெல்லி:

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ படிப்புக்கான இடங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட எண்ணிக்கையில் மிகவும் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்ததாகவும், தற்போது அது 660 ஆக உயர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ளார். இது 71 சதவீத உயர்வு ஆகும்.

இதைப்போல 2014-க்கு முன்பு 51 ஆயிரத்து 348 ஆக இருந்த எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான இடங்கள் தற்போது 97 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து ஆயிரத்து 43 இடங்களாக உயர்ந்துள்ளது.

இதில் 52 ஆயிரத்து 778 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 48 ஆயிரத்து 265 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களும் 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து உள்ளது. 2014-ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த முதுநிலை படிப்புகள், 65 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, "காலம் மாறியதால் நாடு மாறியது" என குறிப்பிட்டு பெருமைப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News