இந்தியா

16 வயதில் பாலியல் உறவு பற்றி முடிவு செய்யமுடியும் - மேகாலயா ஐகோர்ட்டு தீர்ப்பு

Published On 2023-06-25 15:47 GMT   |   Update On 2023-06-25 15:47 GMT
  • பாலியல் உறவு பற்றி 16 வயது சிறுமி முடிவு செய்ய முடியும் என மேகாலயா ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
  • மனுதாரருக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஷில்லாங்:

மேகாலயா மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சிறுவன்மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை நீக்க கோரி மேகாலயா ஐகோர்ட்டில் சிறுவன் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில், சிறுவன் பல்வேறு வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது என்றும், சிறுவனின் மாமா வீட்டில் வைத்து இருவர் இடையே பாலியல் உறவு நடந்துள்ளது எனவும், பாலியல் தாக்குதல் என்ற அடிப்படையில் இந்த வழக்கு இல்லை. கருத்தொருமித்த செயலே ஆகும். சிறுமி தனது வாக்குமூலத்தில் மனுதாரரின் காதலி என்றும், கட்டாயம் எதுவுமின்றி உறவுக்கு ஒப்புதல் அளித்தது பற்றியும் கூறியுள்ளார் என வாதிட்டார்.

மேலும், சிறுவன் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி இருவரும் காதல் உறவிலேயே இருந்துள்ளனர் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி டபிள்யூ தீங்தோ வெளியிட்டுள்ள தீர்ப்பில், 16 வயதில் உடல் மற்றும் மனரீதியாக ஒருவர் நன்றாக வளர்ச்சி அடைந்து இருப்பார். அவர்களது சுகாதார நலன் பற்றி, பாலியல் உறவில் ஈடுபடுவது உள்பட அவர்களுக்கு சுய நினைவுடனான முடிவை எடுப்பதற்கான தகுதியை அவர்கள் பெற்றிருப்பார்கள் என கருதுவது நியாயம். இதனால், சிறுமி வாக்குமூலம் மற்றும் மனுதாரரின் ஆவணங்கள் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, சிறுமியின் வாக்குமூலம் மனுதாரருக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதனால் இதில் குற்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. எனவே மனுதாரருக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News