விசாரணைக்கு ஆஜரானபோது பாலியல் வன்கொடுமை வழக்கில் முகேஷ் கைது
- விசாரணையில் முடிவில் நடிகர் முகேசை, சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
- முகேஷூக்கு எர்ணாகுளம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரித்த நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியும் குற்றச்சாட்டை உறுதி செய்தது. அதன்பின்னர் பல்வேறு நடிகர்கள் மீதும், பாலியல் புகார்களை நடிகைகள் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
குற்றச்சாட்டு கூறப்பட்டவர்களில் நடிகர்கள் முகேஷ், சித்திக், டைரக்டர் ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தவிர்க்க சித்திக், முகேஷ் ஆகியோர் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றனர்.
தொடர்ந்து அவர்கள் புகார்களை விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) முன்பு ஆஜராகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு வடக்கஞ்சேரியில் உள்ள ஓட்டல் அறையில் நடிகர் முகேஷ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி முகேசுக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.
இதனை தொடர்ந்து நேற்று நடிகர் முகேஷ், சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜரானார். அவரிடம், போலீஸ் சூப்பிரண்டு ஐஸ்வர்யா டோங்ரே தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது.
விசாரணையில் முடிவில் நடிகர் முகேசை, சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். அவரை வடக்கஞ்சேரி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சிறிது நேரத்தில் நடிகர் முகேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கொல்லம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் உள்ள நடிகர் முகேஷ், கடந்த மாதம் மற்றொரு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு எர்ணாகுளம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. காலை 9 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். விசாரணை தொடர்பான நடை முறைகளை முடிக்க தேவைப்படும் வரை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.