null
தங்கும் விடுதியில் நமாஸ் செய்த மாணவர்கள் மீது தாக்குதல் - தப்பியோடிய கும்பலை தேடும் போலீஸ்
- இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களால் நோன்பு நோற்கப்படுகிறது.
- தங்கியிருக்கும் இடத்திலேயே நமாஸ் செய்து வந்துள்ளனர்.
குஜராத் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வடநாட்டு மாநிலங்களில் முஸ்லீம் மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகை வரவிருப்பதை ஒட்டி, இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களால் நோன்பு நோற்கப்படுகிறது.
அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கும் விடுதியில் நமாஸ் செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் பல்கலைக்கழக தங்கும் விடுதி அருகில் மசூதி எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மசூதி எதுவும் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே நமாஸ் செய்து வந்துள்ளனர்.
அப்படி நமாஸ் செய்யும் போது, அங்கு வந்த கும்பல் மாணவர்களை சரமாரியாக தாக்கியது. மேலும், அவர்கள் நமாஸ் செய்த அறையில் இருந்த லேப்டாப், மொபைல் போன் மற்றும் இதர பொருட்களை உடைத்துள்ளனர். இதோடு அவர்களது இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த விவாகரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஆப்பிரிக்க நாடுகள், ஆப்கான்ஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர் ஒருவர், "அவர்கள் எங்களை தாக்கினர். அறையில் வைக்கப்பட்டு இருந்த லேப்டாப்கள், மொபைல் போன்களை உடைத்து, இருசக்கர வாகனங்களையும் உடைத்தனர்."
"தாக்குதலில் ஆப்கானிஸ்தான், இலங்கை, தர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் காயமுற்றனர். போலீஸ் வருவதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து கிளம்பிவிட்டது. தாக்குதலில் காயமுற்ற மாணவர்கள் குறித்து அவர்களது தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது," என தெரிவித்தார்.