ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும்.
- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும்.
இந்தியாவில் ஒரே நாடு ஒரே சந்தா (one nation one subscription) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் எளிமையான டிஜிட்டல் செயல்முறை மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி இதழ்களை படிக்க முடியும். அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும்.
மத்திய துறை திட்டமாக 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஒரே நாடு ஒரே சந்தா திட்டமானது இந்தியா முழுவதும் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்து, உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் தரவுகளை பெறும் வழிகளை கணிசமாக மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சந்தா (ONOS) திட்டம் பல்வேறு துறைகளில் பரந்த அளவிலான சர்வதேச இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கு டிஜிட்டல் அணுகலை வழங்குவம். இந்தத் திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய R&D நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைய பத்திரிகைகளின் சேகரிப்புகளை பயன்படுத்தும் வசதியை பெறுவார்கள்.
ஜனவரி 1, 2025 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த தளம், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தகவல் மற்றும் நூலக நெட்வொர்க் (INFLIBNET) மூலம் நிர்வகிக்கப்படும். முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த திட்டம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு உயர்தர ஆராய்ச்சியை பயன்படுத்த வழி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த முயற்சியால் இந்தியாவில் உள்ள சுமார் 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளின் பரந்த அளவிலான தனிநபர்களை உள்ளடக்கியது.