மோடி, ஹசீனா துவக்கி வைக்கும் இந்திய-வங்கதேச ரெயில் சேவை
- 5 கி.மீ. இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் நீள்கிறது
- இத்திட்டத்திற்காக இந்தியா சுமார் ரூ.155 கோடி வரை செலவிட்டுள்ளது
இந்தியாவிற்கும் அண்டை நாடான வங்கதேசத்திற்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இதை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையிலும், இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கிலோமீட்டருக்கு பாதை அமைக்கப்பட்டு ரெயில் சேவை துவங்கப்பட உள்ளது.
அகர்தலா-அகவுரா எல்லை தாண்டிய இணைப்பு ரெயில் சேவை (Agartala-Akhaura Cross Border Rail Link Project) என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 5 கிலோமீட்டர் தூரம் இந்தியாவிலும், 10 கிலோமீட்டர் தூரம் வங்கதேசத்திலும் நீள்கிறது.
இச்சேவை, இந்தியாவின் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா நகரிலிருந்து வங்கதேசத்தின் அகவுரா நகர் வரை செல்கிறது. இடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் (Nischintapur) சர்வதேச குடியேற்ற மைய ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும்.
இந்த நீண்ட ரெயில் தடத்தில் 1 பெரிய பாலமும், 3 சிறிய பாலங்களும் அமைந்துள்ளன.
இந்த சேவையின் மூலம் அகர்தலாவிலிருந்து ரெயில் வழியாக கொல்கத்தாவை அடைய தற்போது 31 மணி நேரம் எடுக்கும் பயண நேரம், 10 மணி நேரமாக குறையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ரெயில்வே, தன் பங்கிற்கு சுமார் ரூ.155 கோடி வரை இதற்காக செலவிட்டுள்ளது.
இந்த சேவையை நாளை மறுநாள் (நவம்பர் 1) இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி மூலமாக காலை 11:00 மணியளவில் ஒன்றிணைந்து துவக்கி வைக்கின்றனர்.