கச்சத்தீவு பற்றி ட்வீட் போட்ட மோடி சீன அபகரிப்பை பற்றியும் ட்வீட் போடுவாரா?: எம்.பி பிரியங்கா சதுர்வேதி
- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
- காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்
காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.இதனையடுத்து இந்திய அரசியலில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது. 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.
கச்சத்தீவு பிரச்சினையை பாஜக கையிலெடுத்துள்ள நிலையில், அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது இந்திய அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"கச்சத்தீவை பற்றி இன்று மோடி எந்த ட்வீட்டும் போடவில்லையா? ஒருவேளை, இந்திய நிலப்பரப்பை சீனா அபகரிப்பது குறித்தும் அருணாசல பிரதேச கிராமங்களின் பெயர்களை சீனா தொடர்ந்து மாற்றி வருவதை குறித்தும் மோடி ஏதும் ட்வீட் போடுவாரோ என்னவோ?" என்று பதிவிட்டுள்ளார்.