இந்தியா

மோடியின் மணிப்பூர் மவுனம்.. மக்களவையை அலறவிட்ட பேராசிரியர் டு முதல் முறை எம்.பி!

Published On 2024-07-03 05:29 GMT   |   Update On 2024-07-03 05:30 GMT
  • மத்திய அமைச்சரை வீழ்த்தி முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்தார் முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்.
  • தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள்

பாராளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வரும் நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக மீது காரசாரமான முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அந்த வகையில் வன்முறையால் துண்டாடப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் பாஜக மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சனை வீழ்த்தி வெற்றிபெற்று முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்த முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்-க்கு நேற்று இரவு கூட்டம் முடியும் சமயத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஏற்கனேவே பலர் கூட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகளுக்கு மத்தியில் பிமோல் பேசத் தொடங்கினார். ஆனால் அவரின் பேச்சு அனைவரையும் வாயடைக்கச் செய்வதாக மிகவும் கூர்மையாக இருந்தது.

 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது, மணிப்பூரில் இன்னும் 60,000 மக்கள் மிகவும் மோசமான நிலையில் நிவாரண முகாம்களில் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்களின் அவஸ்த்தையும் கோபமும் என்னைப்போன்ற ஒரு ஒன்றுமற்ற மனிதனை  அமைச்சராக இருந்தவரை வீழ்த்தச் செய்து ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்துக்கு என்னை அனுப்பியுள்ளது. அந்த வலியை எண்ணிப்பாருங்கள். ஆனால் நமது பிரதமர் [மணிப்பூர் விஷயத்தில்] மௌவுனமாக உள்ளார். ஜனாதிபதி உரையிலும் மணிப்பூர் கலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெற வில்லை. இந்த மௌனம் சாதரணமானது அல்ல.

மவுனம் தான் மணிப்பூர் போன்ற தென்கிழக்கு மாநிலங்களிடம் நீங்கள்  பேசும் மொழியா? என்று நீங்கள் அக்கறை காட்டாத மணிப்பூர் மாநிலம் உங்களை பார்த்து கேட்கிறது, மணிப்பூரில் 200 க்கும் மேற்பட்டோர் கலவரத்தால் இறந்தனர். உள்நாட்டுப்போர் நடப்பது போன்ற சூழலே அங்கு உள்ளது . ஆனால் கடந்த 1 வருடமாக அது யார் கண்களுகும் தெரியவில்லை.

உங்கள் நெஞ்சில் கைவைத்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடற்று நிற்பவர்களையும், தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூரை பற்றி மோடி பேசத் தொடங்கினாள் நான் அமைதி ஆகிறேன் என்று தெரிவித்தார் 

Tags:    

Similar News