ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர்... முகமது யூனுஸ் அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் - சசி தரூர்
- வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர்.
- சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனையடுத்து, வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பேட்டியளித்தார்.
அதில், "முகமது யூனுஸ் குறித்து எனக்கு தெரியும். அவர் பாகிஸ்தானை விட அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பவர். தற்போது வங்கதேசத்தில் பதவியேற்றுள்ள இடைக்கால அரசை பார்க்கையில், நமக்கு விரோதமான நாடுகளை (பாகிஸ்தான் , சீனா) குறித்து இந்தியா கவலை கொள்வதற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.
ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர். உங்களின் நண்பர் ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவ வேண்டும். இந்தியாவும் அதை தான் செய்தது. இந்த விஷயத்தில் நான் இந்திய அரசை பாராட்டுகிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பார் என்று சொல்லமுடியாது. உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளியை நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று நாம் கேட்கக்கூடாது.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் சில இடங்களில் தாக்கப்படுகிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர் என்பதும் தான்.
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்" என்று சசி தரூர் தெரிவித்தார்.