ஆபரேஷன் காவேரி - சூடானில் இருந்து இதுவரை 2300 பேர் மீட்பு
- ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்த எட்டாவது விமானம் இது.
- சூடானில் இருந்து இந்தியா வந்தடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ சி-130 ரக விமானத்தில் 40 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்தடைந்த எட்டாவது விமானம் இது ஆகும். இதன் மூலம் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
"இந்திய வான்படையை சேர்ந்த ஏ சி-130 ரக விமானம் 40 பயணிகளுடன் புது டெல்லியில் தரையிறங்கி இருக்கிறது. இந்த விமானத்தில் வந்தவர்களை சேர்த்தால், சூடானில் இருந்து இந்தியா வந்தடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது," என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார்.
இதுதவிர 229, 228 மற்றும் 135 பயணிகளுடன் மேலும் மூன்று விமானங்கள் இந்தியா வரவுள்ளன. இவற்றை சேர்க்கும் பட்சத்தில் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ கடந்துவிடும்.
முன்னதாக சனிக்கிழமை அன்று 365 இந்தியர்கள் ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பினர். இவர்கள் வந்த விமானம் புது டெல்லியில் தரையிறங்கிது. சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் அந்நாட்டில் சிக்கித்தவிக்கும் தங்களது குடிமக்களை மீட்கும் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றன.