நிபா இறப்பு சதவீதத்திற்கு முன் கோவிட் ஒன்றுமேயில்லை: எச்சரிக்கும் ஐ.சி.எம்.ஆர்.
- இதுவரை 6 பேர் நிபாவினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது
- செப்டம்பர் 24 வரை கல்வி நிலையங்களை மூட உத்தரவு
2019 கடைசியில் தொடங்கி 2020 ஆரம்பத்தில் உலக மக்களை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தையும் ஆட்டம் காண செய்தது கோவிட்-19 பெருந்தொற்று.
தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் மக்களிடையே பரவி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்க பட்டுள்ளதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைய் 6 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இத்தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நோய் பரவல் அதிகரிப்பதனால் இதற்கான சிகிச்சைக்கு தேவையான மோனோகுளோனல் ஆன்டிபாடீஸ் (monoclonal antibodies) எனும் எதிர்ப்பு மருந்தை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா கேட்டிருக்கிறது.
இதற்கிடையே இந்த நிபா தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) தலைமை பொறுப்பிலுள்ள டாக்டர். ராஜிவ் பால் (Dr. Rajiv Bahl) தெரிவித்திருப்பதாவது:-
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்பவர்களின் விகிதாசாரம் 3 சதவீதம் எனும் அளவில் இருந்தது. ஆனால் நிபா தொற்றின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இறப்பு சதவீதம் 70 வரை இருக்கும். இந்தியா நிபா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2018-ல் ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து 10 நோயாளிகளுக்கு பயன்படும் வகையில்தான் கையிருப்பு உள்ளது. இந்தியாவிற்கு வெளியே இந்த நோய்தொற்றில் பாதிப்படைந்தவர்களுக்கு இது தரப்பட்டபோது அவர்கள் முழுவதுமாக குணமடைந்தனர். இதுவரை இந்த மருந்தின் பயன்பாட்டிற்கான முதல் கட்ட ஆய்வு மட்டுமே நிறைவடைந்துள்ளது.
இவ்வாறு டாக்டர். பால் கூறினார்.
இதற்கிடையே நிபா வைரஸ் பரவுதல் அதிகரித்துள்ளதால், கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் செப்டம்பர் 24 வரை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
"தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் உடன் தொடர்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 1080 வரை இருக்கும். அதில் 327 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள்" என நிலைமையை கண்காணித்து நிர்வகித்து வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருக்கிறார்.
கேரளாவின் மற்றோரு அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவிற்கு பயணம் செய்வதை தவிர்க்கும்படி அங்குள்ள மக்களை வலியுறுத்தியுள்ளது.