இந்தியா

3 ஆண்டுகளாக வீட்டில் முடங்கி கிடந்த தாய், மகள்: மருத்துவமனைக்கு வர மறுப்பு

Published On 2022-12-21 07:30 GMT   |   Update On 2022-12-21 07:30 GMT
  • கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
  • வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரியபாபு. கூலி தொழிலாளி. இவரது மனைவி மணி. மகள் துர்கா பவானி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். தொற்று பரவல் குறைந்ததை அடுத்து சூரியபாபு மட்டும் வேலைக்கு சென்று வந்தார்.

ஆனால் சூரியபாபுவின் மனைவி, மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமலும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் தவிர்த்து வந்தனர். தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சூரியபாபு அழைத்தார்.

ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து காக்கிநாடா அரசு ஆஸ்பத்திரியில் சூரியபாபு தெரிவித்தார். டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சூரியபாபு வீட்டிற்கு வந்து தாயும், மகளையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்தனர்.

அப்போது அவர்கள் உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாக கூறி கதவை திறக்க மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று இருவரையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News