இந்தியா (National)

சொந்த வீடு இல்லை: மூடா நில முறைகேடு வழக்கை எதிர்கொள்ளும் சித்தராமையா சொல்கிறார்

Published On 2024-10-23 04:12 GMT   |   Update On 2024-10-23 04:12 GMT
  • முதலமைச்சராக இருக்கும் நான் யாரோ ஒருவர் வீட்டில் வாடகைக்குதான் இருக்க வேண்டுமா?
  • மைசூருவில் உள்ள குவேம்பு சாலையில் என்னுடைய வீடு கட்டப்பட்டு வருகிறது. இன்னும் வேலை முடியவில்லை.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தியிடம் 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தனக்கு சொந்த வீடு இல்லை என கர்நாடக மாநில முதல்வரான சித்தராமையா தெரிவித்துள்ளார். தனது சொந்த தொகுதியான வருணாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சித்தராமையா பேசினார். அப்போது சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை. குமாரசாமி, எடியூரப்பா, விஜயேந்திரா, அஷோகா, பிரகலாத் ஜோஷி போன்றோர்களால் நான் முதல்வராக இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.

முதலமைச்சராக இருக்கும் நான் யாரோ ஒருவர் வீட்டில் வாடகைக்குதான் இருக்க வேண்டுமா? சொல்லுங்கள்... நான் இதை ஏன் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால் நீங்கள்தான் என்னுடைய உரிமையாளர்கள், மாஸ்டர்கள். என்னை அசீர்வதித்தவர்கள்.

மைசூருவில் உள்ள குவேம்பு சாலையில் என்னுடைய வீடு கட்டப்பட்டு வருகிறது. இன்னும் வேலை முடியவில்லை. எனக்கு சொந்தமாக எந்த சொத்தும் இல்லை. கட்டுமான வேலை நடைபெற்று மூன்று வருடங்கள் ஆகிறது. கடந்த மூன்று வருடங்களாக மெதுவாக வேலை நடைபெற்று வருகிறது.

என்னுடைய செல்வாக்கை குறைக்க எப்படி பழி சுமத்துகிறார்கள் பாருங்கள். இந்த செல்வாக்கு எல்லாம் நீங்கள் கொடுத்தது. நீங்கள் ஆசீர்வதித்தது. நீங்கள் கொடுத்த அதிகாரம். நீங்கள் மட்டும்தான் திரும்ப பெற முடியும்.

சித்தராமையா 2-வது முறையாக முதல்வரானதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் முதல்வராகுவதை பா.ஜ.க. விரும்புவதில்லை. சமூக நீதியை அமல்படுத்துதல், ஏழைகளுக்காக பணியாற்றுதல் போன்றவை அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் பா.ஜ.க. சமூக நீதிக்கு எதிரானது. ஏழை மக்களுக்கு எதிரானது.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News