அடுத்தடுத்து 9 பெண்கள் கொலை.. உ.பி.யில் சிக்கிய சீரியல் கில்லர் - அதிரவைக்கும் காரணம்
- எந்த காரணமும் இல்லாமல் நடந்து வந்த இந்த கொலைகளை அவை நடந்த விதத்தை வைத்து மட்டுமே இணைக்க முடிந்தது.
- கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆப்ரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 அடங்கிய 22 குழுக்கள் அமைக்கப்பட்டது
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட அந்த 9 பெண்களும் பெண்களும் அவர்கள் கட்டியிருந்த சேலையைக் கொண்டே கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொலைக்கு பின் அவர்கள் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாக கரும்புத் தோட்டங்களிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடைசியாகக் கடந்த ஜூலை மாதம் அனிதா என்ற பெண் ஒன்பதாவதாகக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆப்ரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 அடங்கிய 22 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக இயங்கி வந்த போலீசார் ஒருவழியாக குல்தீப் என்ற அந்த கொலையாளியைப் பிடித்துள்ளனர்.
எந்த காரணமும் இல்லாமல் நடந்து வந்த இந்த கொலைகளை அவை நடந்த விதத்தை வைத்து மட்டுமே இணைக்க முடிந்தது. இதனால் கொலையாளியின் அடுத்த நகர்வு குறித்து அறிய முடியாத போலீஸ் படையினர் , அப்பகுதிகளில் விவசாயிகள் போலவும், ஊர்க்காரர்கள் போலவும் மாறுவேடத்தில் உலவினர்.
உள்ளூர்வாசிகள் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கொலையாளியின் பென்சில் ஓவியத்தை உருவாக்கி அதை வைத்துத் தேடுதலைத் துரிதப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து ஆபரேஷன் தலாஷ் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் தான் நவாபன்ஞ் மாவட்டத்தில் உள்ள கங்காவர் என்ற பகுதியில் வைத்து குல்தீப் என்ற அந்த சீரியல் கொலையாளியை மடக்கிப் பிடித்துள்ளனர். குல்தீப்பிடம் முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது. தான் 6 பெண்களைக் கொலைசெய்ததாக குல்தீப் போலீசிடம் தெரிவித்துள்ளான்.
திருமணம் ஆன குறுகிய காலத்திலேயே குல்தீப்பின் மனைவி அவனை விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்களின்மீது குல்தீப்புக்கு வெறுப்பு உருவாகி அதுவே கொலை செய்யத் தூண்டியுள்ளது. தனியாகச் சிக்கிய அந்த பெண்கள் உடலுறவுக்கு மறுக்கவே அவர்களை குல்தீப் கொலை செய்துள்ளான். குல்தீப்பிடம் மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.