வேகமாக வளரும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்
- ராஜகோட் உள்பட 5 இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
- கடந்த 70 ஆண்டில் இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.48,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ராஜ்கோட் (குஜராத்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தர பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரா) ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மற்றவர்களிடம் இருந்து நம்பிக்கை முடிவடையும் இடத்தில் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளாக நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. அதுவும் டெல்லியில் மட்டுமே இருந்தது. சுமார் 70 ஆண்டுகளில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுவும் முழுதாகக் கட்டி முடிக்கப்படவில்லை.
தற்போது 10 நாட்களில் 7 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டன. அதனால்தான் கடந்த 70 ஆண்டில் இருந்ததைவிட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று கூறுகிறேன்.
அதிக எண்ணிக்கையிலான எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கான எனது உத்தரவாதத்தை நிறைவேற்றி உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பா.ஜ.க. அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தேன். முந்தைய காங்கிரஸ் அரசு ரேபரேலியில் வெறும் அரசியல் மட்டுமே செய்தது. ஆனால் பா.ஜ.க. அரசு அங்கு உண்மையாக வேலை செய்தது.
கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் கொரோனா தொற்று நோயை இந்தியாவால் தோற்கடிக்க முடிந்தது. நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிப்பதன் மூலம் நோய்கள் ஏற்படுவதை தடுப்பதே நமது அரசாங்கத்தின் முன்னுரிமை ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு உழைத்து வருகிறது என தெரிவித்தார்.