நமாஸ் செய்தவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - மாணவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்த குஜராத் பல்கலை
- அறையை பயன்படுத்தி வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை.
குஜராத் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த ஆறு மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்குவதற்கான அவகாசம் முடிந்த பிறகும், அறையை பயன்படுத்தி வந்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக தங்கும் விடுதியில் நமாஸ் செய்த மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 16 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆப்கன் மற்றும் காம்பியாவை சேர்ந்த அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை நடத்தினர்.
"தங்குவதற்கான கால அவகாசம் முடிந்த பிறகும், தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்த ஆறு ஆப்கன் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டனர். இவர்கள் படிப்பை நிறைவு செய்துவிட்டனர். எனினும், அலுவல் பணிகள் முழுமை பெறாததால் தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்தனர்," என்று துனை வேந்தர் நீரஜ் குப்தா தெரிவித்தார்.
"அவர்களுக்கான அலுவல் பணிகள் முழுமை பெற்ற நிலையில், அவர்கள் பாதுகாப்பாக அவர்களது நாட்டிற்கு செல்ல முடியும். முன்னாள் மாணவர்கள் யாரையும் தங்கும் விடுதியில் தங்க வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மாணவர்களிடம் விடுதியை காலி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.