சென்னை வந்த தேசிய பட்டியல் ஆணையம்: ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி தீவிர விசாரணை
- பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
- 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்த நிலையில் தேசிய பட்டியல் ஆணையமும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. நேரில் விசாரிப்பதற்காக தேசிய பட்டியல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ராமசந்தர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
பெரம்பூர் வேணு கோபால்சாமி தெருவுக்கு சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் சம்பவம் நடந்தது பற்றியும், காரணங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து பிற்பகலில் கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி. போலீஸ் கமிஷனர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுடன் பேசுகிறார்.
அப்போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிகிறார். வழக்கின் புலன் விசாரணை, கொலைக்கான சதி பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்கிறார்.
இந்த ஆய்வை முடித்துக் கொண்டு இன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.