இந்தியா

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேர் அதிரடி கைது

Published On 2024-07-18 05:11 GMT   |   Update On 2024-07-18 06:29 GMT
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • 12 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பாட்னா:

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது.

தேர்வுக்கு ஒரு நாள் முன்பு பீகார் மாநிலம் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. இதே போல ஜார்க்கண்ட், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடை பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்குகளில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட 12 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத் தாள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

ஜார்க்கண்ட் பொகாரோ நகரை சேர்ந்த என்ஜினீயர் பங்கஜ் குமார் என்பவர் இந்த வினாத்தாள்களை திருடியதும் தெரியவந்தது. திருடிய வினாத்தாள்களை கசியவிட்டதில் ராஜூசிங் என்பவர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான என்ஜினீயர் பங்கஜ்குமார், ராஜூசிங் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கைதான பங்கஜ் குமார் கடந்த 2017-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்தவர் ஆவார். இவர்களையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டாக்டர்கள் 3 பேரும் 2021-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் அறைகளுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அவர்களின் லேப்-டாப் மற்றும் மொபைல் போன் களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News