நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்ததா?- சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
- நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது.
- பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது.
புதுடெல்லி:
நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டை தொடர்ந்து தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இதை தொடர்ந்து இந்தியாவில் 4750 மையங்கள், 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 மையங்கள் வாரியான முடிவுகளை இணைய தளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
நாடு முழுவதும் தேர்வு எழுதிய 23 லட்சத்து 33,162 பேரில், 2,321 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 30 ஆயிரத்து 204 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 81 ஆயிரத்து 550 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் எடுத்து உள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள சிகார் மையத்தில் 4297 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலும், 2037 பேர் 650-க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதிய 2250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை. 9,400-க்கும் அதிக மானவர்கள் நெகடிவ் மதிப்பெண் பெற்றனர். ஒரு மதிப்பெண் கூட பெறாததற்கு எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை என்று அர்த்தமல்ல. சில கேள்விகளுக்கு சரியான பதிலும், சில கேள்விகளுக்கு தவறான பதிலும் அளித்து இருக்கலாம். சரியான பதிலுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு, தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதே எந்த மதிப்பெண்ணும் பெறாததற்கு காரணமாகும்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையில் நீதிபதிகள் கே.பி, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டதாவது;-
நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது. ஆனால் மே 3-ந் தேதி தான் வங்கி லாக்கருக்கு சென்றுள்ளது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில் தான் வினாத்தாள் இருந்துள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றார்.
அப்போது முக்கிய பிரச்சனையை விவாதிக்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.